சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் குறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் புதிதாக 5 பண்டைய தமிழ் கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வுகளுடன் சேர்த்து புதிதாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை உள்ளிட்ட 7 இடங்களில் அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களை ஆவணப்படுத்துவதற்காக 2 ஆண்டுகளுக்கு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார். தமிழக பாரம்பரிய கலைகள் இடம்பெறும் வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் சென்னையில் பிரம்மாண்ட கலை விழா இணையவழி மூலம் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் கலைமாமணி விருது பெற்ற வறுமை நிலையில் வாழும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் ஒரு முறை வழங்கப்படும் பொற்கிளி தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.