கள்ளக்குறிச்சி
கல்யாண கடிதாசு
ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமண தேதி முடிவானால்போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசு அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழை கொடுப்பது.
அப்போது பேசாத உறவினர்கூட 'சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமூகமாக உறவுகளைப் புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.
மாறிக்கொண்ட மக்கள்
இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும்கூட. ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள்.
எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூகவலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். மாறி வரும் இந்த கலாசாரம் பற்றிய பொதுமக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்
விழுப்புரத்தை சேர்ந்த தபால்துறை ஓய்வுபெற்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீதரன்:- வாட்ஸ்-அப்பில் திருமணம் மற்றும் இதர சுபநிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்புவதும், செய்திகளை தெரியப்படுத்துவதும் தற்போது மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இது நண்பர்கள், உறவினர்களிடத்தில் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது தவிர்க்க முடியாத உண்மை. குடும்ப விழாக்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் அழைப்பிதழை தாம்பூல தட்டில் வைத்து குடும்பத்தில் முக்கியமான நபர்கள் வந்து அழைப்பது நமது மரபாகவும், கலாசாரமாகவும் இருந்து வந்தது. இது தவறும்பட்சத்தில் உறவினர்களில் சிலர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதும் விழாக்களில் நடந்துள்ளது. வாட்ஸ்- அப்பில் அழைப்பிதழ்களை அனுப்பும்போது இதற்கென இருக்கும் பிரத்தியேக செயலிகள் மூலம் அழைப்பிதழ்களை மிகவும் பிரமாண்டமாகவும், பல்வேறு கோணங்களில் தங்களது புகைப்படங்களை இணைத்து எண்ணங்களை வண்ணமாக அனுப்ப முடிகிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் வாட்ஸ்-அப் செயலி மூலம் நாம் அழைப்பிதழ்களை அனுப்பியது மிகவும் உதவிகரமானதாக இருந்தது என்று சொன்னால் அது மிகையற்ற உண்மை. இந்த காலத்தில் நமது மரபு, கலாசார நிகழ்வுகளில் ஒன்றான மொய் வைப்பது என்பதற்கு ஜிபே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகள் மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகவே என்னை பொறுத்தவரை வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழ் அனுப்புவதை மரியாதை குறைவு என்று எண்ணாமல் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்பது சிறப்பானதாகும்.
ஒரு வார நிகழ்ச்சி
திண்டிவனம் வக்கீல் பொன்ராஜா:- தமிழ்நாட்டில் திருமணம் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் மகிழ்ச்சியான தருணம். முன்னோர்கள் காலத்தில் ஒரு வாரம் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தற்போது அது குறைந்து ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதிலும் கோவிலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என அரை நாளில் முடித்துக்கொள்ளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. கொரோனா காலங்களில் திருமண அழைப்பிதழ்கள் வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்டன. அதேபோல் நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் ஜிபேயில் பணத்தை அனுப்பி வைத்தனர். கொரோனா காலத்திற்கு பிறகு திருமண வீட்டார், நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பதும், திருமணத்துக்கு செல்பவர்கள் ஜிபேயில் மொய் பணத்தை அனுப்புவதும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
வளர்ச்சியால் சுருங்கிய உலகம்
மேல்மலையனூர் அருகே ஆரியப்புரவடை கிராமத்தை சேர்ந்த பலராமன்:- அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது என்று கூறினார்கள். அது இப்போது முற்றிலும் உண்மையாகி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் குடும்பத்துடன் சென்று அழைப்பிதழ் வைப்பார்கள். அவர்களும் சென்று மொய் எழுதிவிட்டு வாழ்த்திவிட்டு வருவார்கள். ஆனால் இன்றோ வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழ் அனுப்புகிறார்கள். இவர்களும் அதேபோல் போன்பே, கூகுள்பே மூலம் மொய் பணம் அனுப்புகிறார்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக அழைப்பிதழை நேரில் வைக்க முடியாததால்தான் வாட்ஸ்-அப்பில் அனுப்புகிறார்கள். அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு செல்போன் மூலம் மொய் பணம் அனுப்புவது தவறு. செல்போன் மூலம் வாழ்த்து தெரிவிப்பது, மொய் பணம் அனுப்புவது என்பது உறவில் விரிசல் ஏற்பட வழிவகுக்கும். எனவே அழைப்பிதழ் வாட்ஸ்-அப்பில் வந்தாலும் நேரில் சென்று மொய் பணம் கொடுக்காவிட்டாலும் வாழ்த்து தெரிவிப்போம்.
உறவினர்களுக்கு கூட அழைப்பு இல்லை
செஞ்சி துறிஞ்சிப்பூண்டி சேட்டு:- முன்பெல்லாம் திருமணம் என்பது அனைவரையும் அழைத்து விருந்தளித்து உபசரித்து மணமகன், மணமகளை வாழ்த்துவது என்பதுதான். ஆனால் இப்போது கோவில்களில் திருமணம் செய்துகொண்டு வீட்டோட, வீடாக உறவினர்களுக்கு மட்டும் தெரிவித்து திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். இதிலே சில இடங்களில் உறவினர்களைக்கூட அழைப்பதில்லை. மேலும் வசதி படைத்தவர்களின் திருமண நிகழ்ச்சி என்றாலே அழைப்பிதழ் வாட்ஸ்-அப் மெசேஜில் வந்தாலே அவர்கள் குடும்பத்துடன் சென்று விருந்து உபசரிப்பு மற்றும் அங்கு நடக்கும் கலை நிகழ்ச்சியை காண்பதற்காகவே அனைவரும் குடும்பத்துடன் செல்வார்கள். நிகழ்ச்சியில் வரிசை வைப்பதற்கு நீண்ட வரிசை நிற்பதால் இப்போது எல்லாம் ஜிபே மூலமாக மொய் எழுதுகிறார்கள். இதுவே ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு நேரில் வந்து அழைத்தால் மட்டுமே வருகிறார்கள். அப்போதுகூட குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டுமே வந்து அவர்களை ஆசிர்வாதம் செய்கிறார்கள். இதுவே இப்போதைய நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.
விரிசலை ஏற்படுத்தும்
சங்கராபுரம் விஜயலட்சுமி: கடந்த காலங்களில் உறவினர் வழியில் திருமணம் நிச்சயம் செய்யப்படும். பின்பு அழைப்பிதழ்கள் உறவினர்களுக்கு நேரில் சென்று வழங்கப்படும். இதையடுத்து உறவினர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே வந்து விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்வார்கள். இதன் மூலம் குடும்ப உறவுகள் மேம்பட்டது. தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் விழா அழைப்பிதழ் அனுப்பும் கலாசாரம் பெருகி வருகிறது. சுப நிகழ்ச்சிகளுக்கான மொய்ப்பணமும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் திருமண ஏற்பாடுகளையும் தற்போது உறவினர்கள் செய்வதில்லை. மாறாக இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனத்தினரே செய்து வருகின்றனர். இந்த கலாசாரம் உறவுகளுக்கிடையே விரிசலை தான் ஏற்படுத்தும். அதனால் நம் மரபை மீறி தொழில்நுட்பம் என்கிற பெயரில் வாட்ஸ்-அப்பில் அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல.
உறவினர்களை மறக்கும் குழந்தைகள்
கள்ளக்குறிச்சி ஜெயராமன்: பொதுவாக வீட்டில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே அழைப்பிதழ் அச்சடித்து, அதனை தங்களது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களுக்கு நேரில் சென்று வழங்கி நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருமாறு அழைப்பார்கள். அதனை ஏற்று அவர்களும் தங்களது குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்வதோடு, அந்த விழாக்களுக்கு வரும் மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கலந்துரையாடி மகிழ்வார்கள். சில நேரங்களில் குடும்ப சண்டையால் பிரிந்த உறவினர்கள் கூட சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மறந்து ஒன்று சேர்வார்கள். ஆனால் தற்போது அனைவரது கைகளிலும் செல்போன் தவழுவதால், தங்களது வீட்டு சுபநிகழ்ச்சி அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு நேரில் சென்று வழங்காமல் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பி, விழாவுக்கு வருமாறு அழைக்கிறார்கள். இதனால் அவர்களும் விழாவுக்கு நேரில் செல்லாமல் வாழ்த்து செய்தியை பதிலுக்கு அதே சமூக வலைத்தளங்களில் அனுப்பி வருகின்றனர். மொய் பணத்தையும் கூகுள்-பே, போன்-பே போன்ற செயலி மூலம் அனுப்புகின்றனர். இதனால் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு தங்களது நெருங்கிய உறவினர்கள் யார்? என்பது கூட தெரிவதில்லை. உறவினர்களுக்கு இடையே இருக்கும் சின்ன சின்ன விரிசல் கூட அது நாளடைவில் அதிகமாகி விடுகிறது.
மக்கள் கருத்து என்ன?
திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், காதணி விழா, புதுமனை புகுவிழா, மஞ்சள் நீராட்டு, குழந்தைகள் பெயர் சூட்டுவிழா, அலுவலக திறப்பு விழா, பழைய நண்பர்கள் ஒன்றுகூடும் விழா என்பன உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் சமூகவலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மொத்தத்தில், சமூகவலைதளங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அது கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்து விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை பின்பற்றலாமே.