தமிழக செய்திகள்

மு.க.ஸ்டாலின் சொத்துக்கணக்கை வெளியிட தயாரா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சவால்

பா.ஜ.க. அடித்தட்டு மக்களின் கட்சி என்றும் மு.க.ஸ்டாலினும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொத்துக்கணக்கை வெளியிட தயாரா? என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

ரேஷன் கடைகளில் சரிவர பொருட்கள் வழங்கப்படாததை கண்டித்து தமிழக பாரதீய ஜனதா மகளிர் அணியினர் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் மாவட்ட தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

சட்டை கிழிப்பு மன்றம்

இன்றைக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை வேறு கூட்டி விட்டார்கள். இதனால் காய்கறி விலை 30 சதவீதமும், கட்டுமான பொருட்களின் விலை 20 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது. மத்திய அரசு வரிகளை உயர்த்தும்போது, பூவில் இருந்து தேனீக்கள் எவ்வாறு வலியில்லாமல் தேனை உறிஞ்சுமோ அதை போல் மக்களுக்கு வலியில்லாமல் வரிகளை உயர்த்தும். ஆனால் மாநில அரசு மக்களுக்கு வலிகளை கொடுக்கிறது.

மக்களை பற்றி சந்திக்கிற, கவலைப்படுகிற ஒரே கட்சி பாரதீய ஜனதா தான். இனியும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்காமல் இருந்தால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்துவோம்.

சட்டமன்ற மான்பை மதிக்க தெரியாதவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். சட்டமன்றம் சட்டை கிழிப்பு மன்றமாக திராவிட இயக்கங்கள் மாற்றி வைத்து இருக்கிறது. சட்டமன்ற மான்பை காப்பாற்ற வேண்டுமானால் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும்.

வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை பாரதீய ஜனதா கட்சியால் மட்டும் தான் தர முடியும். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. போலிரேஷன் கார்டு நீக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் மானியம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஏழைகளுக்கு, அடித்தட்டு மக்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படுகிறது.

சொத்துக்கணக்கை காட்ட தயாரா?

தி.மு.க.வை பொறுத்தவரையில் அவர்கள் அரசியலில் எப்படி குட்டிக்கரணம் போட்டு வளர்ந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை விட நன்றாக குட்டிக்கரணம் போட்டு எங்களாலும் பா.ஜனதாவை வளர்க்க முடியும்.

எங்கள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம் வைத்து இருக்கிறார். திராவிட கட்சியினரை தேசிய சிந்தனையுடன் மத்திய மந்திரிகளாக்கி அழகு பார்த்தது பாரதீய ஜனதா என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

நாங்கள் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களது பிரச்சினைகளுக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களை மேல்தட்டு கட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

நாங்கள் எங்கள் சொத்து கணக்கை காட்ட தயாராக இருக்கிறோம். மு.க.ஸ்டாலினும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொத்துக் கணக்கை வெளியிட தயாரா? அப்போது தெரியும், எந்த கட்சி அடித்தட்டு கட்சி? எந்த கட்சி மேல் தட்டு கட்சி என்பது. பிரதமர் மோடி ஏழைகளுக்காகவே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.