தமிழக செய்திகள்

குடி போதையில் மனைவியை குத்திக்கொன்ற ஜாதிடர் கைது

மடத்துக்குளம் அருகே குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற ஜாதிடர் கைது செய்யப்பட்டார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கிளி ஜாதிடர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது70). இவருடைய மனைவி கற்பகம் (60). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். அவர் தினமும் காலையில் புறப்பட்டு பல ஊர்களுக்கு சென்று விட்டு மாலையில் திரும்புவார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் நடத்தையில் கிருஷ்ணன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணன் வழக்கம் போல மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த, கிருஷ்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் அவரது கை, தலையில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. இதனால் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் கற்பகம் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கணவர் கைது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கற்பகம் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவம் கொமரலிங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.