ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் இருந்ததை கண்டு பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த வீரபெருமாள் (வயது 36) என்பவரை கைது செய்தனர். இதேபோல, முனியசாமி கோவில் தெரு பகுதியில் லாட்டரிகளுடன் நின்றிருந்த அதேபகுதியை சேர்ந்த பாண்டியன் (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையிலான போலீசார் ரோந்துசென்றபோது சின்னக்கடை பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளுடன் நின்றிருந்த செவிட்டு பாஸ்கரன் (57) என்பவரை கைது செய்தனர். லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.