சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தாமல் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் வருகின்ற செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கலைவாணர் அரங்கத்தின் 3வது தளத்தில் அமைச்சர்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் அங்குள்ள இருக்கைகள், மேஜை மற்றும் நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி சட்டப்பேரவை கூட்டத்தொடரை துவக்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு எந்த வகையிலும் நோய்த்தொற்று ஏற்படாத வகையில் கலைவாணர் அரங்கம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.