சென்னை,
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஐஜியாக பதவி உயர்வு பெற்று ரெயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் மீண்டும் அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் அரசுடன் அவர் மோதல் போக்கில் ஈடுபட்டார். ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற தினத்தில் மீண்டும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை விடுவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட தாம், நீதிமன்ற உத்தரவில்லாமல் ஒப்படைக்க முடியாது என பொன்.மாணிக்கவேல் தெரிவிக்க, ஆவணங்களை ஒப்படைக்க நேற்று சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் விடுவிக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.