தமிழக செய்திகள்

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தபடி: 2-வது தவணையாக 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக அரசு கோரிக்கை - கால்வாயை சீரமைக்க ரூ.350 கோடி கேட்கிறது ஆந்திரா

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2-வது தவணையாக 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநில அதிகாரிகள் ரூ.350 கோடி நிதி கோரி உள்ளனர்.

சென்னை,

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை ஆந்திர மாநில அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையே கடந்த 1983-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி என்.டி.ராமராவ் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்த அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்து கடந்த 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 2 தவணைகளாக கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி., ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பருவமழை பொய்த்து போனது, கால்வாய் உடைப்பு, நீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி இதுவரை ஆந்திர மாநில அரசு தமிழகத்துக்கு முழுமையாக 12 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை. ஒவ்வொரு முறையும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசிடம் முறையிடுகின்றனர். அப்போது பெயரளவிற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு முதல் தவணையாக கடந்த ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை திறக்கப்பட வேண்டிய 4 டி.எம்.சி.க்கு பதிலாக 1.25 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கடந்த ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதில் குறைந்த பட்சம் 4 டி.எம்.சி. தண்ணீராவது விரைவில் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. அதற்கு கால்வாய் சீரமைப்பு தொகையை வழங்கினால் உடனடியாக தண்ணீர் திறப்பதாக ஆந்திர மாநில அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து சென்னையை அடுத்து உள்ள பூண்டி ஏரி 432 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, அங்கிருந்து பூண்டிக்கு திறக்கப்படுகிறது. இதுநாள் வரை கண்டலேறு அணையில் இருக்கும் தண்ணீரை பூண்டிக்கு அதிகாரிகள் திறந்து விட்டு வந்தனர்.

தற்போது கண்டலேறு அணையிலும் போதிய தண்ணீர் இல்லாததால் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கண்டலேறுக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீர் கண்டலேறு வந்தடைவதற்கு குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் தற்போது இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்கள் பழுதடைந்து இருப்பதுடன், ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளும் ஏற்பட்டுள்ளதால் அவற்றை சீரமைக்கும் பணியில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் கண்டலேறு அணைக்கு தண்ணீர் வருவதற்கு ஆகும் காலமும் அதிகரிக்கும். ஒப்பந்தப்படி கால்வாய் பராமரிப்பு செலவை 2 மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒப்பந்த விதி உள்ளது.

இதற்காக தமிழக அரசு தரப்பில் ஆந்திர அரசிடம் ரூ.600 கோடிக்கு மேல் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த கால்வாயில், பல்வேறு பாசன விரிவாக்க பணிகளை செய்து, அதற்கும் ஆந்திர அரசு, தமிழக அரசிடம் பணம் கேட்டு வருகிறது. அதன்படி தற்போது ஸ்ரீசைலம்-கண்டலேறு அணைகளுக்கு இடையே கால்வாய் சீரமைக்க ரூ.350 கோடியை ஆந்திர மாநில அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.

தமிழக, ஆந்திர மாநிலங்களுக்கு இடையே போட்ட ஒப்பந்தப்படி நடப்பு ஆண்டுக்கான 2-வது தவணையாக கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. நீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைத்தால், வறட்சியில் தவிக்கும், சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்