காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் ஓரிக்கை திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் பசலுல்லாகான் (வயது 50). தொழில் அதிபர். இவர் காஞ்சீபுரம் மேட்டுத்தெரு, செங்கழுநீரோடை தெரு போன்ற இடங்களில் சூப்பர் மார்க்கெட்டை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சூப்பர்மார்க்கெட்டை மூடிவிட்டு பசலுல்லாகான் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் தனது வீட்டின் அருகே நள்ளிரவு 12 மணியளவில் சென்றபோது, திடீரென ஒரு வேன் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பசலுல்லாகான் கீழே விழுந்தார். உடனே வேனில் வந்த மர்மநபர்கள் அவருக்கு தண்ணீர் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு பசலுல்லாகானிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் கேட்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த வேனில் பசலுல்லாகானை கடத்தி சென்றனர்.
தீவிர சோதனை
இது குறித்து பசலுல்லாகானின் மகன் ஜெயாருதீனுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவித்தார். காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி உத்தரவின்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, பிரபாகர், பழனி, பாலுச்செட்டிசத்திரம் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் மின்னல் வேகத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். வயர்லஸ் மூலம் காஞ்சீபுரம், வேலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தனர்.
இறக்கிவிட்டனர்
இந்த நிலையில் போலீசார் தங்களை தீவிரமாக தேடுவது கடத்தல்காரர்களுக்கு தெரியவந்தது. இதனால் பயந்து போன அவர்கள் நள்ளிரவு 2 மணியளவில் காஞ்சீபுரத்தை அடுத்த சித்தனகாவல் என்ற இடத்தில் பசலுல்லாகானை கீழே இறக்கிவிட்டு வேனில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் விரைந்து சென்று பசலுல்லாகானை மீட்டனர். தொழில் அதிபர் கடத்தப்பட்டது பற்றி பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என்றும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்தார்.