தமிழக செய்திகள்

மறுதேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டத்தொடர் தள்ளிவைப்பு கடைசி நாள் கூட்டத்தில் தி.மு.க. வெளிநடப்பு

தமிழக சட்டசபை கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையின் கடைசி நாள் கூட்டத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 3 நாட்களாக பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துக்கு நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். மேலும், 2018-19-ம் நிதியாண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க ரூ.2 ஆயிரத்து 19 கோடியே 11 லட்சம் அரசு அனுமதித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

பதிலுரை முடிந்ததும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ஆஸ்டின் ஆகியோர் சில விளக்கங்களை கோரினர்.

பொன்முடி பேசும்போது, ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 கோடியே 1 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,985 கோடியே 46 லட்சம் ஒதுக்கியுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை பட்ஜெட்டில் ரூ.2,019 கோடியே 11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2 கோடியே 1 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாயை அளித்தால் ரூ.2,010 கோடிதான் செலவாகும். அப்படியிருக்கும்போது கூடுதல் நிதி ஏன் ஒதுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டுவிட்டது. சிலரிடம் அதிகபணம் இருப்பதால் அவர்கள் பணம் வாங்கவில்லை. தற்போது ரேஷன் அட்டைகள் 2 கோடியே 02 லட்சம் அளவுக்கு உள்ளன. தகுதியானவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் ரூ.2,019 கோடியே 11 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

ஆனால் இந்த பதில் தெளிவாக இல்லை என்று கூறிவிட்டு தி.மு.க.வினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் உடனே மீண்டும் அவைக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.

பின்னர் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சண்முகத்தை சட்டசபை வளாகத்தில் துணை முதல்-அமைச்சர் அழைத்து பேசினார். அதைத் தொடர்ந்து கிடைத்த விளக்கத்தை சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 100 குடும்ப அட்டைகள் உள்ளன. பட்ஜெட்டில் அதை 2,019 என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 9 என்ற எண் விடுபட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 100 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டால் ரூ.2 ஆயிரத்து 19 கோடி வருகிறது. தவறாக பதிவானதை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

நாகர்கோவிலை மாநகராட்சியாக்கும் சட்ட மசோதா நேற்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் விவாதிக்க சபாநாயகர் ப.தனபாலிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் அனுமதி கேட்டார். ஆனால் மசோதாவை ஆரம்பகட்ட நிலையில் எதிர்க்கவில்லை என்பதால் அனுமதி அளிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனால் ஆவேசம் அடைந்த ஆஸ்டின் தன்னிடம் இருந்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவையை விட்டு தனியாளாக வெளியேறினார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 8-ந்தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து 11, 12, 13-ந்தேதிகளில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார்.

இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 9 சட்ட மசோதாக்கள் நேற்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கடந்த 5 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று மட்டுமே தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

அனைத்து அலுவல்களும் முடிந்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டத்தை தள்ளிவைத்து சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்