சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக, 2021-இல் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024 ஆண்டும் மார்ச் 21-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் வரும் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த 6-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.