சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரும், சசிகலாவின் உறவினருமான மருத்துவர் சிவக்குமார் ஏற்கனவே ஆணையத்தில் இருமுறை ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.
இந்தநிலையில் ஆணையம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று மதியம் 2.30 மணிக்கு அவர் மீண்டும் ஆணையத்தில் ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளை தவிர்த்து மேலும் பல கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி, மருத்துவர் சிவக்குமாரிடம் கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிவக்குமார் பதில் அளித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அனைத்து நாட்களும் மருத்துவமனையில் இருந்து அவரது சிகிச்சைகளை கண்காணித்து வந்தவர் என்ற அடிப்படையில் சிவக்குமாரிடம் ஆணையத்தின் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக கூறப்படும் விவகாரம் குறித்தும், அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தார் என்று கூறப்படும் விவகாரம் குறித்தும் குறுக்கு விசாரணை செய்தனர்.
அப்போது சிவக்குமார் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. ஸ்கேன் போன்ற மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும் போது அமைச்சர் நிலோபர் கபில் மட்டும் மிக அருகில் ஜெயலலிதாவை பார்த்தார். மற்ற அமைச்சர்கள் சற்று தொலைவில் இருந்து பார்த்தனர்.
சசிகலா மட்டும் தினமும் ஜெயலலிதாவை சந்தித்தார். ஒரு சில நாட்கள் சசிகலாவை அழைத்து வரும்படி சைகை மூலம் மருத்துவ பணியாளர்களிடம் ஜெயலலிதா கூறுவார். அதன்படி சில நாட்கள் மட்டும் இரண்டு அல்லது மூன்று முறை ஜெயலலிதாவை சசிகலா சந்தித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அறையின் கண்ணாடி வழியாக அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் ஜெயலலிதாவை பார்த்தார். அப்போது நான் கவர்னர் அருகே நின்று கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ பணியாளர் ஒருவர் சிறிய பந்து ஒன்றை தூக்கி வீச, அதை ஜெயலலிதா கைகளை தூக்கி பிடித்துக்கொண்டிருந்தார்.
மற்றபடி கவர்னர் வந்திருப்பதை ஜெயலலிதா கவனித்ததாகவோ, கை அசைத்ததாகவோ தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்ட பின்பு சசிகலாவை தவிர யாரும் அவரை சந்திக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு திடீர் இருதய அடைப்பு ஏற்பட்டதும் எக்மோ கருவி பொருத்தப்பட்டது. இதன்பின்பு எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிவுரைப்படி எக்மோ கருவி அகற்றப்பட்டது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மாலை 4.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
கவர்னர் வித்யாசாகர்ராவை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தார் என்றும், இதனை கவர்னர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். அதேபோன்று, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர் என்றும் சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
இதனை மறுத்து மருத்துவர் சிவக்குமார் ஆணையத்தில் பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று (3-ந் தேதி) காலை 10.30 மணிக்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.