தமிழக செய்திகள்

தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாதிக்கபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை தலைமை செயலகம் கடந்த மே 18-ந் தேதியில் இருந்து 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தலைமை செயலகத்துக்குள்ளும் கொரோனா எப்படியோ புகுந்து விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் உள்ள 10 மாடிகளை கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு அலுவலகத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த முழு தளமும் மூடப்பட்டது.

இதற்கிடையே முதல்-அமைச்சர் அலுவலகத்தை சேர்ந்த 2 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தலைமை செயலகத்துக்கு வராமல், அரசு அலுவல்களை தனது முகாம் அலுவலகத்தில் இருந்தபடி கவனித்து வருகிறார்.

ஏற்கனவே பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். தற்போது 42 வயதுடைய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல நண்பர்களான இவர்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல 41 வயது ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அது நெகடிவ் என்று முடிவு வந்துள்ளது.

தலைமை செயலகத்தில் சுழற்சிமுறையில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அதன்படி தினமும் 3,300 பேர் பணிக்கு வருகின்றனர். மாடிக்கு செல்ல பலர் லிப்ட்டை பயன்படுத்தியாக வேண்டும். இது கொரோனா தொற்றுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளான ராயபுரம், எம்.கே.பி.நகர், தண்டையார்பேட்டையில் இருந்தும் ஊழியர்கள் பலர் தலைமைச் செயலகத்துக்கு வேலைக்கு வருகின்றனர். இது கொரோனா பரவல் அச்சத்தை ஊழியர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

ஊழியர்கள் அதிகம் பேருக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக 50 சதவீத ஊழியர்கள் என்பதை 33 சதவீதம் என்று குறைக்கும்படி முதல்-அமைச்சரை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் 40 பேருக்கும் அதிகமானோர் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், பரிசோதனை முடிவுகள் வர, வர இந்த எண்ணிக்கை 80-ஐ தாண்டும் என்று அலுவலர்கள் சிலர் அச்சம் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது