தமிழக செய்திகள்

தேர்தல் நேரத்தில் வழக்கு தொடுத்து காலவிரயம் செய்கிறார்கள்: பொருட்காட்சி திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தேர்தல் நேரத்தில் மக்களின் ஆதரவை பயன்படுத்தாமல் வழக்கு தொடுத்து காலவிரயம் செய்கிறார்கள் என்று தி.மு.க. மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கினார்.

சென்னை,

46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொருட்காட்சியை தொடங்கிவைத்து பேசியதாவது:-

பொருட்காட்சியில் 28 மாநில அரசு துறைகள், 14 பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் ஒரு நிறுவனம், 4 பிற மாநில அரசு நிறுவனங்கள், தமிழ்நாடு சட்ட உதவி மையம் மற்றும் 110 தனியார் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய உலகில் சுற்றுலா பயன்மிகு தொழிலாக விளங்குகிறது. சுற்றுலா மூலம் தனிநபர் பயன் அடைவதைவிட நாட்டின் வருவாயும் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி அடைந்து நாடு முன்னேற வழிவகுக்கிறது.

சுற்றுலா துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும், புதிய சுற்றுலா மையங்களை தேர்வு செய்து அடிப்படை வசதிகளை உருவாக்குவதையும் தமிழக அரசு செய்துவருகிறது. 2014, 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டில் 30 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 61 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ளனர்.

ஆண்டுக்காண்டு தமிழ்நாட்டுக்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தியாவிலேயே மிகவும் விரும்பத்தக்க சுற்றுலா தலங்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மாமல்லபுரத்தில் சீன அதிபரும், பாரத பிரதமரும் சந்திப்பு நடத்தியது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகும்.

சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஏற்கனவே உள்ள வசதிகளை நவீனப்படுத்தவும் மத்திய அரசின் துணையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற் கான ஒப்புதலை மத்திய அரசு சமீபத்தில் வழங்கி இருக்கிறது.

தமிழக அரசின் திட்டங்கள் பலரால் பாராட்டப்பெற்றாலும், சிலர் ஒப்புக்கொள்ள முடியாமல் நாம் பயணிக்கும் பாதையில் தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். உலகத்திலேயே தாங்கள்தான் திறமைசாலிகள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். மக்களின் ஆதரவை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தாமல் வழக்கு தொடுத்து காலவிரயம் செய்தவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருட்காட்சி இன்று (திங்கட்கிழமை) முதல் 70 நாட்கள் நடக்கிறது. அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அத்திவரதர் சயன நிலையில் இருப்பது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரியவர்களுக்கு ரூ.35-ம், சிறியவர்களுக்கு ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். நுழைவுச்சீட்டுக்கு குலுக்கல் முறையில் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் வே.அமுதவல்லி, எம்.எல்.ஏ.க்கள் நட்ராஜ், சத்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் அசோக் டோங்ரே விளக்க உரையாற்றினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு