பாலக்கோடு
பாலக்கோடு அருகே கொல்லஅள்ளி காலனியை சேர்ந்த முனியப்பன் மகன் கேசவன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவருடைய பெரியப்பா ஊராட்சி டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேசவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த குண்டன் என்பவருக்கும் குடிநீர் திறப்பது குறித்து தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கேசவன் கடந்த 2 மாதங்களாக வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் ஊருக்கு வந்தார். இதையறிந்த குண்டனின் உறவினர்கள் ஆறுமுகம் (24), முனியப்பன் (24) மற்றும் சிலர் நேற்று மாலை கேசவன் வீட்டுக்கு சென்று பூந்தொட்டி, ஜன்னல் கதவுகளை உடைத்ததாக தெரிகிறது. மேலும் கேசவன், அவரது தாய் மற்றும் அக்காளை தாக்கினார்களாம். இதனால் 2 சமூகத்துக்கும் இடையே மாதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஏராளமான கமாண்டோ போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மேலும் தலைமறைவான் ஆறுமுகம், முனியப்பன் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.