கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல், பத்திர எழுத்தர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனால் சத்தம் கேட்டு மைக்கேல் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் அப்பகுதிக்கு வந்தனர். இதை கண்ட அந்த நபர்கள் ஸ்கூட்டரில் தப்பி சென்றனர். இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணாடியை உடைத்தது பள்ளிப்படி பகுதியை சேர்ந்த முருகன் என்கிற அப்பு (வயது 20), சளிவயல் மில்லிகுன்னுவை சேர்ந்த பிரின்ஸ் ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் குடிபோதையில் வீட்டின் கண்ணாடியை உடைத்து திருட முயன்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அப்புவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பிரின்சை தேடி வருகின்றனர்.