தமிழக செய்திகள்

பொதுமக்கள் நலனில் பிரச்சினை ஏற்படாமல் ஆவின் பார்த்துக்கொள்ளும் -அமைச்சர் அறிக்கை

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலனில் பிரச்சினை ஏற்படாமல் ஆவின் பார்த்துக்கொள்ளும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆவின் 9 ஆயிரத்து 763 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும், பல லட்சம் பால் உற்பத்தி செய்யும் உறுப்பினர்களையும், சுமார் 35 ஆயிரம் பணியாளர்களையும் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் ஆகும். பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, சீரான மற்றும் நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதையும் இலக்காக கொண்டுள்ள நிறுவனமாகும். மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும், வரி விதிப்புகளாலும், உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து, பால் உற்பத்தி செலவு உயர்ந்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.

பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தித்தர வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். தி.மு.க. அரசு பொறுப்பேற்றதன் தொடர்ச்சியாக, லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகத்தை பொறுத்தளவில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரே சீரான விலையை அனைத்து காலங்களிலும் வழங்கிவருகிறது. இதை, வேறு எந்த நிறுவனங்களும் கடைப்பிடிப்பதில்லை. மேலும், கால்நடைகள் வாங்க கடன் உதவி, கால்நடைகளுக்கு காப்பீடு, மருத்துவ உதவிகள் மற்றும் இனச்சேர்க்கை போன்ற திட்டங்களும் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை, பங்கு ஈவுத்தொகை போன்றவற்றையும் வழங்கிவருகிறோம்.

உற்பத்தியை பெருக்க...

பால் விற்பனையை பொறுத்தவரையில் வேறு எந்த நிறுவனங்களையும்விட மிக தரமானதாகவும், விலை குறைந்ததாகவும், பொதுமக்களுக்கு ஆவின் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. குறிப்பாக, நிர்வாகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள், கணினிமயமாக்கல் மற்றும் தானியங்கி எந்திரமயமாக்கல், புதிய பால் பொருட்கள் உற்பத்தி முறையான சந்தைப்படுத்துதல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலத்தை பேணுதல், பால் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகள் மற்றும் தர மேலாண்மை போன்றவற்றில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அஞ்சவேண்டாம்

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நேரத்தில் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளும்விதமாக உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. வெகுவிரைவில் சீரான பால்கொள்முதல், பால் பதப்படுத்துதல், பால் பொருட்கள் தயாரித்தல், விற்பனையை முறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்கள் எதையும் கண்டு யாரும் அச்சப்படவில்லை. ஆனால், பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையிடுவதில்லை. எனவேதான் முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்கவேண்டாம் என கடிதம் எழுதினார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலனை பேணவும் பால் கையாளும் திறனை அதிகரிக்கவும் உரிய அறிவுரைகளை தந்துள்ளார். அவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே எந்தவிதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்களான பொதுமக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம். ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை, உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு வழங்குவதற்கும், அவர்கள் நலனை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி