சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால் தமிழ்நாடு விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார். 1973-ம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, விவசாய மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக பாடுபட்ட அவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோதுதான் தன் இன்னுயிரை நீத்தார். அத்தகைய பெருமகனாரின் நினைவுநாளான இன்று (நேற்று) அவரைப் போற்றுவதில், நாம் எல்லாம் பெருமை அடைகிறோம்.
சி.நாராயணசாமி நாயுடு நமது விவசாயிகளுக்கு ஆற்றிய சிறந்த சேவையை போற்றிப் பாராட்டும் வகையில், குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு முதல் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித்திறனுக்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.