திருவண்ணாமலை,
கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முகக் கவசம் அணிவது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் சார்பில் நூதன முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. அப்போது போலீசார் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிக்கி மவுஸ், கிங் காங் உடை அணிந்த நபர்கள் மூலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிர்புறம், மாடவீதியில் காந்தி சிலை அருகே, காய்கறி மார்க்கெட் எதிரே, காமராஜர் சிலை எதிரே என பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மேலும் நாளை முழு ஊரடங்கு தொடர்பாக போலீசார் மூலம் ஆட்டோ பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும், தேவையின்றி வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.