சென்னை,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (25.03.2026) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமையில் நுங்கம்பாக்கம், எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பலகையில் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு கையெழுத்துப் பலகையில் கையொப்பமிட்டனர். பின்னர், எனது வாக்கு எனது உரிமை என்ற சுயபுகைப்பட (Selfie Point) பதாகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் இடது கை ஆட்காட்டி விரலை உயர்த்தி புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மெரினா கடற்கரையில் Your Vote, Your Future, உங்கள் வாக்கு 100% என்ற தேர்தல் விழிப்புணர்வு மணற்சிற்பம் உருவாக்கப்பட்டது. இந்த மணற்சிற்பத்தினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர், பொதுமக்களுடன் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கையில் தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்று பொதுமக்களுக்கு 100% வாக்குப்பதிவு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, வார்டு-64க்குட்பட்ட சீனிவாச நகர் 3-வது பிரதான சாலையில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் மொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், தேர்தல் அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.