சென்னை,
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.
குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் சிறையில் உள்ள 17 பேருக்கும் கொடுக்கப்பட்டது. பின்னர் கடந்த வருடம் ஜனவரியில் இந்த வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுத்தரப்பில் 36 சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று திங்கட்கிழமை குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கபட்டது. இந்த நிலையில் இன்று குற்றவாளிகள்15 பேரும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர். என்.மஞ்சுளா தீர்ப்பு வழங்கினார்
தீர்ப்பு விவரம் வருமாறு:-
* ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
* ராஜசேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. எரால் பிராஸ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மற்ற குற்றவாளிகள் சுகுமாறன்,சூர்யா, ஜெயராமன், உமாபதி, முருகேசன் , பரமசிவம், ஜெயகணேஷ், தீனதயாளன், ராஜா ஆகிய 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.