திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் நேற்று நடந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
திருச்செந்தூர் கொண்டுள்ள பல்வேறு சிறப்புகளுடன் மேலும் ஒரு சிறப்பாக உழைப்பின் செல்வர், உயர் நிர்வாக திறனாளர், உலக அளவில் இந்தியாவை விளையாட்டுத்துறையில் உயர்த்தியவர், தினத்தந்தியோடு மாலைமலர், ராணி, ராணிமுத்து, டிடி நெக்ஸ்ட், ஹலோ எப்.எம் பண்பலை ரேடியோ, தந்தி டி.வி என பல ஊடகங்களை உருவாக்கி, பரிமளிக்கச் செய்து, பத்திரிகை உலகில் கொடிகட்டி பறந்ததோடு, தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். ஜெயலலிதா மீது மரியாதையும், பாசமும் கொண்டிருந்தவர். கல்விக்கூடங்கள், கல்லூரிகள் நிறுவிய கல்விச்சாதனையாளர். ஆலய திருப்பணிகளில் சிறந்து விளங்கிய புகழ் பெற்ற ஆன்மிக செல்வர்.
பா.சிவந்தி ஆதித்தனார் பெற்றுள்ள இத்தனை சிறப்புகளும் ஒரே இரவில் அவர் பெற்று விட்டதல்ல. ஒவ்வொரு அடியாக நடந்து, ஒவ்வொரு படியாக கடந்து, அடிவேர் முதல் நுனித் தளிர் வரை ஒவ்வொன்றிலும் பயிற்சி பெற்று, அயராத உழைப்பை நல்கி அவர் பெற்றிருக்கும் சிறப்புகளாகும். இதனை அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலமாகவே நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
பா.சிவந்தி ஆதித்தனார், தனது கல்லூரி படிப்பை முடித்ததும் தந்தையை பின்பற்றி பத்திரிகை துறையில் ஈடுபட விரும்பிய நேரத்தில், தந்தை சி.பா.ஆதித்தனார், அவரை அனுப்பி வைத்த இடம் அச்சுக்கோர்க்கும் கூடமாகும்.
முதலாளி மகன் முதலாளி ஆவதுதான் எந்த ஒரு நிறுவனத்திலும் நாம் காணுகின்ற வழக்கம். ஆனால், அதற்கு மாறாக, ஒரு முதலாளி தன் மகனை ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கச்சொன்னார் சி.பா.ஆதித்தனார். அந்த மகனும் சிறிதும் மறுப்பும் சொல்லாமல், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்னும் தமிழ் முதுமொழியை தலைமேல் ஏற்று, அச்சகத்தில் அச்சுக்கோர்ப்பவர்களில் ஒருவராக, நீல நிற சீருடை அணிந்து, எழுத்து அடுக்கிப்பழகி, தன் பத்திரிகை துறை வாழ்வை தொடங்கினார் பா.சிவந்தி ஆதித்தனார்.
எழுத்து அடுக்கும் பணி, எவ்வளவு சிரமமானது என்பதை இன்றைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். அச்சுக்கலை இன்று ஒரு மகத்தான மாற்றத்தை, புரட்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இன்று கணினியில் எளிதாக தட்டச்சு செய்து, எத்தனை பிழைகள் இருந்தாலும், அத்தனை முறையும் எவ்வித சிரமமும் இல்லாமல் திருத்தி, பக்கம் வடிவமைத்து அனுப்பிவிடலாம்.
ஆனால், அன்றைய நிலைமை இப்படி இல்லை. அது மிகவும் கடினமான பணி. தமிழில் உள்ள அத்தனை எழுத்துகளுக்கும் அச்சுக்கூடத்தில் தனித்தனி பிறை இருக்கும். ஒவ்வொரு பிறையிலும் குறைந்தபட்சம் 50 எண்ணிக்கையில் ஈயத்திலான ஒரே எழுத்து இருக்கும். எந்தப் பிறையில், எந்த எழுத்து இருக்கிறது? என்று மனப்பாடமாக நினைவில் கொண்டு, கால்கடுக்க எதிரே நின்று, அச்சியற்ற வேண்டிய வார்த்தையை கண்ணால் பார்த்தபடி, அதற்கேற்ற எழுத்துகளை ஒவ்வொன்றாக எடுத்து, இடது கையில் கோர்த்து, அதை கொடுக்கப்பட்ட காலம் அளவுப்படி தொகுத்து வைக்க வேண்டும். வலது கை வேறு ஏதாவது பிறையிலிருந்து தவறான எழுத்தை எடுத்துவிட்டாலோ அல்லது இடது கை சரியாக அடுக்காவிட்டாலோ மொத்த வேலையையும், மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும்.
இந்த கடினமான வேலையைத்தான், நமது சிவந்தி ஆதித்தனாரை முதன்முதலாக கற்றுக்கொள் என்று சி.பா.ஆதித்தனார் பணித்தார்.
அதன் பிறகு, சிவந்தி ஆதித்தனார் மெஷின் ஓட்டப்பழகினார். பின்னர் செய்தி சேகரிப்பது எப்படி? என்று பயிற்சி எடுத்தார். செய்திப்பிரிவு பயிற்சி முடிந்ததும், விற்பனை செய்வது எப்படி? அச்சடித்த நாளிதழ்களை எந்தெந்த ஊருக்கு எப்படி அனுப்புவது? என்ற பயிற்சியை மேற்கொண்டார். தொழிலாளர்களுடன் தொழிலாளராக, பணியாளர்களுடன் பணியாளராக இந்த பயிற்சிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, மாலைமுரசு நாளிதழைத் தொடங்குகின்ற பணியை அவரிடம் கொடுத்தார் சி.பா.ஆதித்தனார்.
முதலாளியான தந்தை, தன் மகனை முதலாளி ஆக்காமல், தொழிலாளியாக வேலை கொடுத்ததையும், அந்த மகனும் துளியும் செருக்கு காட்டாமல், அந்த பணியை மேற்கொண்டதும், அவர்கள் இருவருமே எந்த அளவுக்கு உயர்ந்த சிந்தனையாளர்கள், உழைப்பின் பெருமையை எந்த அளவுக்கு உணர்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டி கொண்டிருக்கிறது. இந்த உயர்ந்த தன்மைதான் அவர்களை புகழின் உச்சத்துக்கு உயர்த்தியது என்பதை இந்த இனிய தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
உழைப்பது என்று ஒருவர் முடிவெடுத்து விட்டால், ஆண்டவனின் அருள் அவருக்கு பரிபூரணமாய் கிடைத்துவிடுகிறது. பிறகு அவரை வெல்வதற்கு இனி உலகில் ஆளே கிடையாது. இதைத்தான் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் விளக்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு மனிதர் உயரும்போது, தான் மட்டுமே உயர்ந்தால் போதும் என்று எண்ணக்கூடாது. தன்னோடு தன் குடும்பத்தினரும் உயர வேண்டும், தனது சமூகமும் உயர வேண்டும், தனது குடியும் உயர வேண்டும் என்று எண்ணி செயல்பட வேண்டும். இந்த பரந்த சிந்தனைக்குச் சொந்தக்காரராக பா.சிவந்தி ஆதித்தனார் விளங்கினார். இவரது பத்திரிகை சேவையைப் பாராட்டி பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தன. சென்னை ஷெரீப் ஆக 2 முறை நியமிக்கப்பெற்ற புகழுக்கு சொந்தக்காரர். உழைப்பால் உயர்ந்த உத்தமர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த, நாடார் சமூகம் என்றாலே, வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள், வியாபார ஞானம் மிக்கவர்கள் என்று சொல்லி விடுவார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் படைப்புத்திறனும் மிக்கவர்கள், பத்திரிகை துறையிலும் வெற்றிக் கொடி நாட்டுபவர்கள் என்ற புதிய சரித்திரத்தை பா.சிவந்தி ஆதித்தனார் உருவாக்கி காட்டியுள்ளார்.
நாடார் இன மக்கள், பலரும் போற்றத்தக்க வகையில் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு சாதனைகள் படைக்கும் திறன் உடையவர்கள் என்றும், கல்வி மற்றும் தொழில் துறையிலும் வெற்றி காணும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும், அவர்கள் தங்களது கடின உழைப்பாலும், உறுதிமிக்க உள்ளத்தாலும், எதையும் சாதிக்கும் சக்தியுடையவர்கள் என்றும், புதுப்பெருமையை இன்று படைத்துக் கொண்டிருப்பதற்கு முன்னோடியாக பா.சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறு அமைந்திருக்கிறது என்று பெருமையாக கூறிக்கொள்கிறேன்.
அன்னை தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு தம் வாழ்வையே அர்ப்பணித்த தமிழ் சான்றோர்கள், தமிழ்நாட்டுக்கு பெருமையினைத் தேடித்தந்த பெருமக்கள் ஆகியோரது நினைவுகளை போற்றியும், தியாகங்கள் பல புரிந்து தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உயர்ந்த சாட்சியங்களாக விளங்கும் தியாகிகளை பெருமைப்படுத்துகின்ற வகையிலும், அத்தகைய பெருந்தலைவர்களுக்கு ஜெயலலிதாவின் இந்த அரசு புதிதாக மணி மண்டபங்கள் அமைத்தும், அவர்களது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடியும் கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், மாநிலம் முழுவதும், 99 தலைவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில், தமிழக அரசால் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தியாகசீலர்களின் உன்னத வரலாற்றை இன்றைய தலைமுறையினரும், வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து பயனடையும் வகையில், தமிழக அரசால் 70 நினைவகங்கள், 4 அரங்கங்கள், 5 நினைவுத்தூண்கள், ஒரு நினைவுச் சின்னம் ஆகியன உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
தூத்துக்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்தார். அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையிலும், சொன்னதைச் செயல்படுத்தும் அரசு ஜெயலலிதா அரசு என்பதை தொடர்ந்து நிரூபிக்கும் வகையிலும் தற்போது, 71-வது நினைவகமாக, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வளவு பெருமைகளுடைய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்ததன் மூலம், தமிழக அரசு தனிப்பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.