விழாவில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது:-
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் என்று சீர்காழி பாடினார். ஆனால் திருச்செந்தூரின் கடலோரத்தில் எங்கள் சிவந்தி ஆதித்தனாரின் அரசாங்கம் என்று சொல்லும் அளவுக்கு, சின்னய்யா ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய பல பணிகளை தான் எடுத்து செய்து, தன் சமுதாயத்துக்கு மட்டுமின்றி தமிழ் சமுதாயத்துக்கே பாடுபட்டார். அந்த மகானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. உயர்ந்த சிந்தனைக்கும், சொன்ன வார்த்தைக்கும், செய்த செயலுக்கும் எந்த இடைவெளியும் இல்லாமல் டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அமைத்து, கோடிக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சிலே பால்வார்த்த முதல்-அமைச்சர் இந்த மணிமண்டபத்தை திறந்து வைப்பது சாலச்சிறந்தது.
1942-ம் ஆண்டு வைக்கோலை கூழாக்கி தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் காகிதம் தயாரித்து, அதன் மூலம் 17 வயது பருவமங்கையாக தினத்தந்தியை கொடுத்தார். தன் மகன் தன்னை விட பெரியவராக இருக்க வேண்டும் என்று, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அச்சு கோர்ப்பது, முதல் பிரிண்டிங் வரை ஒவ்வொரு அம்சமாக கற்றுக்கொடுத்தார். இதனால் 3 பதிப்பில் இருந்து, 15 பதிப்பாக உருவாக்கினார். அவரது மகன் 18 பதிப்பாக உருவாக்கினார். தற்போது 20 லட்சம் பிரதிகள் விற்பனையாகி வருகிறது. ஒரு தமிழ் பத்திரிகையை, இந்தியாவிலேயே முதன்மை பத்திரிகையாக மாற்றிய ஜாம்பவான். இந்தியாவில் எங்கு சென்றாலும் ஒலிக்கும் பெயர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயர். அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பணியாற்றினார். தொழில் துறையிலும் சாதனை படைத்தார். தொழில்துறை, விளையாட்டுத்துறை, பத்திரிகை துறை, ஆன்மிகம் அனைத்திலும் முத்திரை படைத்தார். கொடுத்து கொடுத்து கரங்கள் சிவந்ததால்தான், உங்கள் பெயரே சிவந்தி ஆதித்தனோ என்று ஒரு கவிஞர் பாடி உள்ளார். அத்தகைய புகழுக்கு சொந்தக்காரரான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.