கோவை,
கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அத்துடன் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் உள்ள வாளையாறு, எட்டிமடை, மதுக்கரை வழியாக மருதமலைக்கு வந்து பின்னர் கணுவாய் பள்ளத்தாக்குக்கு செல்கிறது.
இதனால் மதுக்கரை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இதில் வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு 2 தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தை கடக்கும்போது காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால் தமிழக எல்லை முடிந்ததும் கேரள வனப்பகுதி தொடங்குகிறது. இங்கும் தண்டவாளத்தை ஒட்டி உள்ள பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அங்கு இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று அதிகாலையிலும் ஒரு யானை ரெயிலில் அடிபட்டு உயிரிழந்து உள்ளது.
அதாவது, தமிழக-கேரள எல்லையில், 6 கி.மீ. தூரத்தில் வாளையாறு மான்கள் பூங்கா அருகே வட்டப்பாறை என்ற இடத்தில் யானைகள் கூட்டம் தண்டவாளம் அருகே நின்றது. அவை தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் குட்டி யானை மீது மோதியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது தொடர்பாக வாளையாறு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.