ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை காவிரி ஆறு, பவானி ஆறு, அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடுகிறார்கள்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் கூட்டம் கூடுவதற்கும் நீர்நிலைகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு அன்று பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தங்கள் மூதாதையர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் தமிழக அரசு தடை விதித்துள்ளதால் ஆடிப்பெருக்கான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பவானி கூடுதுறையில் புனித நீராட தடை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.