சென்னை,
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் நாளை(ஜனவரி 6) முதல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்ததற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி 41-வது நாளாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராடி வருகிறார்கள். நாடு முழுவதும் விவசாயிகளை ஆதரித்துப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
பல மாநிலங்களில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் வேளாண் சட்டங்களை ஆதரித்து வருகின்றது.
இந்ந நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் நாளை(ஜனவரி 6) முதல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு சென்னை பெருநகரக் காவல்துறை தடை விதித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் ஆயுதமாக அதிமுக அரசு பயன்படுத்தி வருகிறது. முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த வரைமுறைகளும் கடைப்பிடிக்காமல் மக்கள் திரட்டப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.