நெல்லை மாவட்டத்தில் களக்காடு, வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 4 ஒன்றியங்களில் 2-வது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு தனது சொந்த கிராமமான வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பணகுடி அருகே லெப்பைக்குடியிருப்பு பெரியநாயகிபுரம் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக அமைதியாக நடந்து முடிந்துள்ளது.கிராமத்தின் உயிர் நாடியே உள்ளாட்சி அமைப்புகள்தான். கிராம ஊராட்சிகள் உயிரோட்டமாக இருந்தால்தான் சாலை, குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ஞானதிரவியம் எம்.பி. தனது சொந்த ஊரான வள்ளியூர் யூனியன் ஆவரைகுளத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்க பதிவு செய்தார்.