சென்னை,
இரண்டாவது நாளாக இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் முதல் நாளில் பங்கேற்ற பல்வேறு நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் தாங்கள் முதலீடு செய்ய விரும்பும் துறைகளுக்கான கருத்தரங்குகளில் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நடந்த கருத்தரங்கில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.
சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாய்ப்புகள், உணவுத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மின்சாதனங்கள் உற்பத்தியில் தமிழகத்தை ஒரு முனையமாக்குவது, ஜவுளித்துறை முதலீட்டுக்கான வாய்ப்புகள், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இந்த கருத்தரங்குகளில் பிரபல தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கில் பிரிகேட், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 2-வது நாளில் 6 நாட்டு தூதர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது:-
2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ.3.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என கூறினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசும்போது கூறியதாவது:-
தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி.
தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தமிழகம் வாகனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது. மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும்.
தமிழகத்தில் திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் தத்துவம் ஆகும்.
மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன என கூறினார்.