தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள க.சாயர்புரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மகன் கணேஷ்குமார் (வயது 27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு கணேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சாப்பிடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இரவு சுமார் 11 மணியளவில் தேரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் தும்பு ஆலை அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று திடீரென வந்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், மாட்டின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கணேஷ்குமார் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த கணேஷ்குமாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை தனராஜ் அளித்த புகாரின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.