கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த, வீரத்தின் விளைநிலம் என்று போற்றப்பட்ட, கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். தீரன் சின்னமலைக்கு என தனி வீரவரலாறு உண்டு.

1756-ம் ஆண்டு இதே நாளில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்தினசாமி-பெரியாத்தா தம்பதிக்கு மகனாக பிறந்தவர்தான் தீரன் சின்னமலை. அவரது இயற்பெயர் தீர்க்கதரிசி சர்க்கரை. கொங்கு நாட்டின் வரிகள் அனைத்தும் மைசூர் அரசுக்கு செல்வதை பொறுக்காத தீர்க்கதரிசி சர்க்கரை, ஒருநாள் அந்த வரிப்பணத்தை சிறைபிடித்து அங்கிருந்த ஏழைகளுக்கு பிரித்து கொடுத்தார்.

அதுமட்டுமின்றி, மைசூருக்கு வரி பணத்தை வசூலித்து செல்லும் அரச பிரதிநிதியிடம், வரிப்பணத்தை சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு சின்னமலை பறித்து விட்டதாக போய் உன் அரசிடம் சொல் என்று மிரட்டி அனுப்பினார். அன்றிலிருந்துதான் அவர் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டார்.

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டுவதை அடியோடு எதிர்த்த ஒரு சில வீரதீர மன்னர்களில் தீரன் சின்னமலையும் ஒருவர். குறிப்பாக கேரளம் மற்றும் சேலம் பகுதிகளில் ஆங்கிலேயே படை ஒன்று சேராமல் பார்த்துக்கொண்டதில் இவருக்கு பெரும் பங்குண்டு. அதே சமயத்தில் ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்த்த திப்புசுல்தானின் வீரம் தீரன் சின்னமலைக்கு பிடித்துப் போனது.

அதனால், திப்புசுல்தானுடன் கைக்கோர்த்து, கொங்குப்படையை சீரங்கப்பட்டினம் உள்ளிட்ட அதனை சுற்றி நடந்த போர்களுக்கு வழிநடத்தி சென்று திப்பு சுல்தானின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் தீரன் சின்னமலை.

தீரன் சின்னமலையின் இந்த வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்