கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மைய குழு கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது

கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த சூழலில் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

பின்னர் அங்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் பிரசாரத்தை முடித்துகொண்டு மீண்டும் நேற்றிரவு 7 மணியளவில் சென்னை திரும்பினார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். அவரை அங்கு தமிழக பா.ஜ.க. நிர்வாகி எச்.ராஜா, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இந்நிலையில் அந்த ஓட்டலில் பிரதமர் மோடி தலைமையில் தமிழக பா.ஜ.க. மைய குழு நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஸ் கோயல், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நிர்வாகிகளான மத்திய இணை மந்திரி எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக அண்ணாமலை கேரளா பிரசாரத்தில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார். இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று நிர்வாகிகளை பிரதமர் மோடி ஊக்கப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர் மதியம் 1 மணி வரை ஓட்டலில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் 3 முறை (செங்கல்பட்டு, மதுரை, திருச்சி) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த முறை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு மட்டும் அவருடைய பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அவருடைய பயண திட்டத்தில் 'ரோடு ஷோ' இடம் பெறவில்லை என தகவல்கள் தெரியவந்துள் ளன.