மயிலாடுதுறை ,
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
முதல்-அமைச்சராக ஆவதற்கு முன்பே நான் உங்கள் ஊர் மாப்பிள்ளை. இப்போது மருமகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாட்டு மக்கள் துடைத்து எறிவார்கள். பேசுவதற்கு எதுவும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கண்டபடி பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் முதல்-அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்பது அவரின் பேச்சின் மூலமே தெரிகிறது.
தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே சென்று கொண்டிருக்கிறது. அவதூறு பேச்சுக்களால் தன்னையும் தனது கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
மத்திய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்கள் அதிகமாக நடக்கிற மாநிலங்களின் டாப் 10 பட்டியலில் தமிழ்நாடே இல்லை. இந்தியாவின் வளர்ச்சி எஞ்சின் தமிழ்நாட்டை மத்திய அரசு எந்த அளவுக்கு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
தென்மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி பேச எடப்பாடி பழனிசாமி வக்கில்லாமல் இருக்கிறார். அதிமுகவை குத்தகைக்கு எடுத்துள்ள பாஜக மீதான பயம்தான் காரணம். அதிமுகவையும், பழனிசாமியையும் பாஜக குத்தகைக்கு எடுத்துள்ளது. அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டையே கூறுபோட்டு விற்றிருப்பார்.
மதுரையில் பாஜக வெற்றிபெற வைத்தால்தான் மெட்ரோ ரெயில் வழங்குவோம் என மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளிப்படையாக கட்ட பஞ்சாயத்து செய்கிறார். இப்படி மிரட்டுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்துள்ளது. மத்திய அரசின் ஊழலும், பொறுப்பின்மையுமே இதற்கு காரணம்.
செய்திருப்பதை சொல்லி, செய்ய இருப்பதையும் சொல்லி வாக்கு கேட்டால் அது திராவிட மாடல் அரசு. பொய்களையும், அவதூறுகளையும் மட்டும் சொல்லி வாக்கு கேட்டால் அது பழனிசாமி மாடல்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.