பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலை அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர் 93 பேரை போலீசார் கைது செய்தனர்.
முற்றுகை போராட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் பா.ஜனாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பாளையங்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் கார்த்திக் நாராயணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், சனாதனம் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டிக்காத இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 93 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது குடிப்பதற்கு தண்ணீர் கூட போலீசார் வழங்கவில்லை என்று கூறி முன்னாள் மேயர் புவனேஸ்வரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இரவில் பா.ஜ.க.வினர் விடுவிக்கப்பட்டனர்.
வங்கிக்கு வந்தவர்
போராட்டம் நடந்தபோது அந்த வழியாக வங்கி ஒன்றுக்கு பணம் போடுவதற்கு வந்த ஒரு நபர் நெற்றியில் பட்டை போட்டிருந்தார். அவரை போலீசார் நீங்கள் பா.ஜனதா போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் என்று கூறி கைது செய்ய சென்றனர். அவர் போலீசாரிடம் தான் வங்கிக்கு வந்ததாக கூறினார் இருந்தாலும் போலீசார் விடவில்லை அவரை விரட்டி சென்றனர். இதனால் மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாங்குநேரி
நாங்குநேரியில் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கவி கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர் மீனாதேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.