தமிழக செய்திகள்

இந்துத்துவாவை எதிர்ப்பதாக கூறி தி.மு.க.வை வைகோ ஆதரிப்பதா? டாக்டர் தமிழிசை பாய்ச்சல்

எவ்வளவு தடுத்தாலும் பாரதீய ஜனதாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என தமிழிசை பேசி உள்ளார்.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். இந்துத்துவாவை எதிர்த்து போராடவும், திராவிட இயக்கத்தை சிதைத்து இந்துத்துவாவை திணிக்க முயற்சிக்கும் பா.ஜனதாவை வீழ்த்த திராவிட இயக்கமான தி.மு.க.வை ஆதரிப்பதாக அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:- அண்ணன் வைகோ போன்றவர்கள் இந்துத்துவாவை எதிர்த்து போராடுகிறோம் என்று பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். தி.மு.க. செய்த துரோகத்தை மறந்து அவர்களை தேடி சென்று ஆதரவு கொடுக்கிறார் என்றால் அதற்கு ஏதாவது காரண காரியங்கள் இருக்கலாம். அதற்காக ஒரு காரணத்தை தேடி அதற்கு இந்துத்துவா என்று பெயர் சூட்டி மக்களை வித்தை காட்டி ஏமாற்ற நினைக்க வேண்டாம். இனியும் இந்த வித்தைகளை மக்கள் நம்பமாட்டார்கள்.

வைகோ இந்துத்துவாவை எதிர்ப்பதாக இருந்தால், மதசார்பற்றவர் என்றால் முதலில் எதிர்க்க வேண்டியது ராகுல் காந்தியையும், தி.மு.க. ஸ்டாலினையும்தான். குஜராத் தேர்தலில் மதத்தை வைத்து பேசி அரசியல் தேடுவது யார்? நான் சிவ பக்தன் என்று பிரசாரம் செய்வது யார்? அப்படிப்பட்ட ராகுலுடன் தி.மு.க. கூட்டணிவைத்து உள்ளது. இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள் முதலில் இந்துத்துவா பற்றி பேசும் ராகுலையும் காங்கிரசை ஆதரிக்கும் தி.மு.க.வையும் எதிர்க்க வேண்டும். திராவிட கலாச் சாரத்துக்கு பா.ஜனதா எதிரானது அல்ல.

இந்த நாட்டின் கலாச்சாரத்தை கட்டிக்காப்பது பா.ஜனதா என்பது போலி மதச்சார் பின்மை பேசுபவர்களை தவிர அனைவருக்கும் தெரியும்.

திராவிடம் என்ற பெயரை வைத்திருப்பதால் மட்டும் தமிழ்பற்றாளர்கள் ஆகிவிட முடியாது. திராவிடம் என்ற பெயரை வைக்காதவர்கள் தமிழ் விரோதிகள் என்றும் சொல்லிவிட முடியாது. மக்களை குழப்பும் இந்த போலி அரசியலை பா.ஜனதா செய்யாது. இப்படிப்பட்ட போலித் தகவல்களை மக்களிடம் தோலுரித்து காட்டவும் தயங்காது. மு.க.ஸ்டாலின், புயலில் கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரி நேற்றுதான் கடிதம் எழுத தொடங்கி இருக்கிறார். ஆனால் நேற்று முன்தினமே பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் தமிழக அரசை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்க தாயார் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலையில் நேரடியாக சென்று பார்வையிடுகிறார். நீங்கள் கேட்காமலேயே 8 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், கடலோர காவல் படைகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கே இந்துத்துவா எங்கே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

எவ்வளவு தடுத்தாலும் பாரதீய ஜனதாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது, யார் என்ன கூட்டணி வைத்தாலும் பாஜகதான் காரணம் எனக்கூறுவது வேடிக்கையாக உள்ளது என டாக்டர் தமிழிசை கூறிஉள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்