மதுரை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் தேர்தல் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இதனை தொடர்ந்து இன்று ஜே.பி. நட்டா தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் இன்று தங்கி ஓய்வெடுத்த பின்னர் நாளை ஜே.பி. நட்டா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.