திருப்பத்தூர்,
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரதின விழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பத்தூரில் பா.ஜ.க. சார்பில் ஊர்வலம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் நான்குரோடு அருகே பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் கூடிய பா.ஜ.க.வினர் தேசியக்கொடி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவு தூணிற்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்.
பின்னர் அங்கிருந்து மதுரை சாலை வழியாக அண்ணா சிலையை வந்தடைந்தனர். அங்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா,ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டு மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவர்கள் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் மாநில பொதுச்செயலாளர் பொன்பாலகணபதி, பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்கபெருமாள், மாநில உள்ளாட்சி பிரிவு தலைவர் சோழன்பழனிச்சாமி, மாவட்ட பொது செயலாளர்கள் முருகேசன், முன்னாள் வர்த்தக அணி சகாதேவன் மார்த்தாண்டன், நாகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயபால், சிவராமன், ஒன்றிய தலைவர் தங்கபாண்டி, வேதநாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல காளையார்கோவிலில் நடந்த நிகழ்ச்சியிலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் தேசியக்கொடியுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் மருது பாண்டியர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து முத்துவடுகநாத தேவர் சமாதியில் அண்ணாமலை மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சக்தி, எச்.ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.