சென்னை,
தமிழகத்தில் வரும் நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரையை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், வேல் யாத்திரை விவகாரத்தில் அரசு முடிவு செய்யலாம் என்றும், மாநில அரசு இரு விண்ணப்பங்கள் மீதும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தடை கோரிய இரு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் வேல் யாத்திரையை பாஜக கைவிட வேண்டும் என்றும், சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும். 2-வது அலை, 3-வது அலை, ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழக்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது; சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.