தமிழக செய்திகள்

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அமைச்சர், கலெக்டர் மற்றும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தினத்தந்தி

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஆரேக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மெர்சியா (30), நாகராஜ் (52), சாம்சன் (28), செந்தில்குமார் (32) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களின் படகை இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பல் மூலம், மோதி கடலில் மூழ்கடித்து 4 மீனவர்களையும் கொலை செய்தனர்.

அதனைத்தொடர்ந்து மீனவர்களின் உடலை விரைவாக தமிழகம் கொண்டு வர மீனவர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தமிழக அரசு, மீனவர்கள் உடலை தமிழகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் நேற்று காலை இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மீனவர்களின் உடலை கடல் வழியே ராமேசுவரம் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமேசுவரம் கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டு மீனவர்களின் உடல்களை பெற கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2 விசைப்படகுகள் இந்திய எல்லையான 20 நாட்டிக்கல் தொலைவிற்கு சென்றது. அங்கு ஏற்கனவே இலங்கை கடற்படையினரிடம் உடலை பெற்றுக்கொண்டு தயார் நிலையில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர் காலை 11 மணிக்கு தமிழக மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து 4 மீனவர்கள் உடல்களையும் படகில் ஏற்றிக்கொண்டு கோட்டைப்பட்டினம் துறைமுகம் புறப்பட்டனர். 4 பேரின் உடல்கள் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் வருகிறது என்ற செய்தி பரவியதை அடுத்து கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான மீனவர்கள், பொதுமக்கள் குவிந்தனர். உடலை ஏற்றி செல்ல 4 ஆம்புலன்ஸ் வாகனமும் துறைமுகத்திற்கு வந்தன. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மதியம் 2.30 மணியளவில் மீனவர்கள் உடல்கள் விசைப்படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டு மீன்பிடித்தளத்தில் அஞ்சலிக்காக வரிசையாக வைக்கப்பட்டன. மீனவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கலெக்டர் உமா மகேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர் மீனவர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்சுகள் ராமேசுவரம் புறப்பட்டன. ஆம்புலன்ஸ் உடன் புதுக்கோட்டை மாவட்ட போலீசார்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆகியோர் சென்று புதுக்கோட்டை மாவட்ட எல்லையான அரசங்கரை சோதனைசாவடியில் வைத்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின் உடலை பெற்றுக்கொண்ட ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகள் மீனவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டுசென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மீனவர் மெசியாவின் உடல் தங்கச்சி மடத்திலும், காதனேந்தலில் நாகராஜ் உடலும், மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் சாம்சன் உடலும், உச்சிப்புளி பகுதியில் செந்தில்குமார் உடலும் அடக்கம் செய்யப்பட்டன.

முன்னதாக மெசியா உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் நிற்காமல் நேரடியாக மயானத்துக்கு சென்றுவிட்டது. இதனால் உறவினர்களும், மீனவர்களும் ஆத்திரம் அடைந்தனர். மீனவரின் உடலை காண்பிக்காமல் மயானத்திற்கு எடுத்து சென்றதை கண்டித்து, ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை