அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை முத்துநகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது39). இவர் குலசேகரம் மணவிளை உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலைப் பார்த்து வந்தார். இவருக்கு முத்துமாரி (33) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
ராஜஷ் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்பு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் கடுக்கரை பகுதியில் உள்ள சீமாட்டிகுளத்தில் ராஜேஷ் பிணமாக மிதந்தார். இதைபார்த்த பாதுமக்கள் உறவினர்களுக்கும், பூதப்பாண்டி போலீசாருக்கும் தகவல் காடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரேஷன் கடை ஊழியர் குளத்தில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.