எர்ணாகுளம்,
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக் கான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. நாடு முழுவதும் 136 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 2,225 தேர்வு மையங்களில் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 10 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 5,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளாவில் எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. சிலருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
இதற்கு மாணவர்களும், பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் பலன் இல்லை.
இதனால் பல குளறுபடிகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத தேவையான உதவிகளை தமிழக அரசு செய்தது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக பஸ், ரெயில்கள் மூலம் அங்கு புறப்பட்டு சென்றனர்.
என்றாலும் மன உளைச்சலால் மாணவர்களும், பெற்றோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும் குளறுபடிகளுக்கும், கடும் மனஉளைச்சல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்த நீட் தேர்வு தமிழகத்தில் 2 உயிர்களை பலிவாங்கிவிட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்த நூலகர் கிருஷ்ணசாமியின் (வயது 47) மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு எர்ணாகுளம் தம்மணம் பகுதியில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் கடந்த 4-ந் தேதி காரைக்கால்-எர்ணா குளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவாரூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். அந்த விடுதியின் மேலாளராக இருக்கும் முருகானந்தம் என்பவர் தமிழர் என்பதால், கிருஷ்ணசாமி நன்கு பழகினார். நேற்றுமுன்தினம் காலை அவர் தனது மகனை அழைத்துக் கொண்டு நாலந்தா பள்ளி தேர்வு மையத்துக்கு சென்று பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பினார்.
நேற்று காலை மகனை அவர் தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருந்தார். ஆனால் லேசான தலை சுற்றலும் மயக்கமும் இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை. விடுதி மேலாளர் முருகானந்தத்தை அழைத்து, தனக்கு உடம்பு சரி இல்லை என்றும், கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினார். அத்துடன், தான் இருதய நோயாளி என்றும், அதற்கான மாத்திரைகள் கொண்டு வரவில்லை என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ண சாமியை ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு மேலாளர் முருகானந்தம் காலை 7.30 மணி அளவில் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தை தேர்வு மையத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை விட்டுவிட்டு 8.30 மணிக்கு விடுதிக்கு திரும்பினார். கிருஷ்ணசாமி தங்கி இருந்த அறைக்கு அவர் சென்று பார்த்த போது, அங்கு கிருஷ்ணசாமி மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகானந்தம் உடனே அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு கிருஷ்ணசாமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன்பிறகு கிருஷ்ணசாமியின் உடல் அங்கிருந்து எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கிருஷ்ணசாமி இறந்த தகவல், பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு தெரியாது. தந்தை இறந்தது தெரியாமலேயே அவர் தேர்வை எழுதிக் கொண்டு இருந்தார்.
இதற்கிடையே, கிருஷ்ணசாமி இறந்தது பற்றி எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் முகமது சபருல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலெக்டர் முகமது சபருல்லாவை தொடர்பு கொண்டு பேசினார்.
மதியம் 1 மணிக்கு நீட் தேர்வு முடிந்த பிறகுதான், கிருஷ்ணசாமி இறந்தது பற்றி அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தேர்வு முடிந்ததும் போலீசார் நேராக நாலந்தா பப்ளிக் பள்ளி தேர்வு மையத்துக்கு சென்று, கிருஷ்ணசாமி இறந்தது பற்றி கஸ்தூரி மகாலிங்கத்திடம் கூறி, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து கஸ்தூரி மகாலிங்கம் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
கிருஷ்ணசாமி இறந்தது பற்றிய தகவலை அறிந்ததும் விளக்குடியில் உள்ள அவரது மனைவியும், மகளும் கதறி அழுதனர். கிராம மக்கள் அவர்களுடைய வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. எம்.எல்.ஏ.க்கள் ஆடலரசன், தமிமுன்அன்சாரி, தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கிருஷ்ணசாமியின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி, மகளுக்கு ஆறுதல் கூறினர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு கிருஷ்ணசாமியின் உடலை எர்ணாகுளத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. கிருஷ்ணசாமியின் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ் மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது.
கிருஷ்ணசாமி திருத்துறைப்பூண்டி அருகே பெருகவாழ்ந்தானில் உள்ள அரசு நூலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பாரதி மகாதேவி(40). மாற்றுத்திறனாளியான இவர் ராயநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு கஸ்தூரி மகாலிங்கம் (17) தவிர, ஐஸ்வர்யா மகாதேவி (15) என்ற மகளும் உள்ளார். ஐஸ்வர்யா மகாதேவி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி உள்ளார். செஸ் வீரரான கஸ்தூரி மகாலிங்கம் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளார். இதேபோல் மதுரையிலும் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த லாரி உரிமையாளரான கண்ணன் (49) என்பவர் தனது மகள் தேவி ஐஸ்வர்யாவை, நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு அழைத்துச் சென்றிருந்தார். பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உள்ள மையத்தில் தேவி ஐஸ்வர்யா நீட் தேர்வு எழுதினார். கண்ணன் கல்லூரிக்கு வெளியே காத்து இருந்தார்.
மதியம் தேர்வு முடிந்து வெளியே வந்த தேவி ஐஸ்வர்யா, தனது தந்தையிடம் தேர்வு மிகவும் கஷ்டமாக இருந்ததாக கூறினார். அதை கேட்டதும் கண்ணன், தனக்கு மயக்கம் வருவதாக கூறி சரிந்து விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி ஐஸ்வர்யா அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக அவரை மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கண்ணன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக் டர்கள் தெரிவித்தனர். தந்தை இறந்ததை பார்த்து தேவி ஐஸ்வர்யா கதறி அழுதார்.
நீட் தேர்வு காரணமாக 2 பேர் உயிர் இழந்ததற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.