தமிழக செய்திகள்

தெருவில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி! - தூத்துக்குடியில் சோகம்

8 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

சென்னை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நாச்சியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் உதய சுதர்சன் (8), திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி கோடை விடுமுறையையொட்டி, குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது பாட்டி லிங்ககனி வீட்டிற்கு வந்திருந்தான்.

நேற்றுமுன்தினம் மாலை, உதய சுதர்சன் தனது நண்பர்களுடன் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பந்து அருகிலிருந்த சந்திற்குள் விழுந்தது. அதை எடுக்கச் சென்றபோது, அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த எர்த் கம்பியில் அவனது கால் பட்டதாக கூறப்படுகிறது.

அந்த எர்த் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், சிறுவன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.