திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகன்கள்.கோபிநாத் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். ஐஸ்வர்யா அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார், இந்த நிலையில் வீட்டின் அருகே ஐஸ்வர்யாவின் மகன் விகாஸ் (வயது 4) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பாம்பு சிறுவன் விகாசை கடித்துள்ளது. இதனால் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிறுவனை விஷ பாம்பு கடித்தது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர், விகாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.