சென்னை,
1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போன்று காலை சிற்றுண்டி திட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் உலக நாடுகளின் பாராட்டுக்குரிய வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த முறையில் நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து உலக நாடுகளும் பாராட்டுக்குரிய வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த முறையில் நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
குறுகிய காலத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வரும் தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது" என்று கூறியுள்ளார்.