வாலாஜாபாத் பேரூராட்சி சேர்க்காடு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகை அரசு (வயது 47). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர் திருமணத்திற்காக தணிகையரசு வீட்டை பூட்டிக்கொண்டு தனது குடும்பத்தாருடன் செங்கல்பட்டுக்கு சென்று உள்ளார். உறவினர் திருமணத்தை முடித்து கொண்டு நேற்று காலை வீடு திரும்பி பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தணிகையரசு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்தவுடன் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதை தொடர்ந்து, வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் தனிப்படைகள் அமைத்து திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.