தமிழக செய்திகள்

வங்கியில் கடன் வாங்க லஞ்சம்: அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கல்லூரி விரிவாக்கத்துக்கு வங்கியில் கடன் வாங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து வருகிறார். இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்படும், சக்தி மாரியம்மன் என்ஜினீயரிங் கல்லூரி தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். 2012-13-ம் ஆண்டில் கல்லூரி விரிவாக்கத்துக்காக கடன் பெற சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியை கல்லூரி நிர்வாகம் அணுகியது.

அப்போது, வங்கி முதுநிலை மண்டல மேலாளராக இருந்த தியாகராஜன், கல்லூரி நிர்வாகத்தின் விண்ணப்பத்தை முறையாக பரிசீலிக்காமல், ரூ.20 கோடி கடன் வழங்கினார்.

இதற்கு லஞ்சமாக தியாகராஜன் குடும்பம் அமெரிக்கா சென்று வருவதற்கான விமான கட்டணம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்தை அறக்கட்டளையில் இருந்து ராமச்சந்திரன் செலுத்தினார்.

இந்த முறைகேடு சி.பி.ஐ.க்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் முறைகேடாக கடன் வழங்கியதின் மூலம் வங்கிக்கு ரூ.17.28 கோடி இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்து வந்தது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். இதையொட்டி கே.என்.ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

மதியம் 1.30 மணியளவில் கே.என்.ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரம் பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றார்.

அப்போது நீதிபதி முன்னிலையில் கே.என்.ராமச்சந்திரன் மன்றாடினர். அவர், அய்யா... நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் 45 வருட பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். கல்விப்பணியில் என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன். எத்தனையோ ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கியிருக்கிறேன். பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளேன். என்னால் முடிந்த வரை நல்லதையே செய்திருக்கிறேன். என் மீது கருணை காட்டவேண்டும். நான் எந்த தவறையும் செய்யவில்லை என்று குரல் தழுதழுக்க கூறினார். அதேபோல, தனது உடல்நிலையை காரணம் காட்டி வங்கி மேலாளர் தியாகராஜனும் நீதிபதியிடம் கெஞ்சினார்.

இதைத்தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி, தண்டனை விவரத்தை அறிவித்தார்.

தீர்ப்பில், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன், வங்கி மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படுகிறது. எனவே, கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1.11 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.13.10 லட்சம் அபராதமும், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.15.20 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கே.என்.ராமச்சந்திரன் உள்பட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்ததும் அவர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். இதுதொடர்பாக அவர்களது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினர்.

தீர்ப்பு கூறுவதற்காக நீதிபதி கோர்ட்டு அறைக்கு வந்ததும் அவர்கள் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். தீர்ப்பை கேட்டதும், நீதிமன்ற அறையில் வங்கி மேலாளர் தியாகராஜன் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதி அனுமதியின் பேரில், அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோரை சென்னை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு