சென்னை,
கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து போபாலில் செயல்படும் பறவை நோய்கள் ஆராய்ச்சி மையத்திற்கு பறவைகளின் மாதிரிகள் அனுப்பப்பட்டு, பறவை காய்ச்சலின் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் தற்போது தீவிர நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 26 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகின்றன. கேரளாவில் இருந்து வாத்துகள், கோழிகள் அவற்றின் முட்டைகள் ஆகியவற்றை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழையாமல் தடை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் தமிழகத்திற்குள் நுழையும் மற்ற அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இதனிடையே நன்கு சமைத்த கோழி உணவுகளை சாப்பிட்டால், மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் வர வாய்ப்பில்லை என கால்நடை துறை விளக்கமளித்துள்ளது. மேலும் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு என்பதால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று கால்நடை துறை தெரிவித்துள்ளது.