தமிழக செய்திகள்

பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் முடிவை ரத்து செய்ய வேண்டும் - ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் முடிவை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 50 சதவீத ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றனர். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களையும் குறைக்கும் நடவடிக்கையில் நிர்வாகம் இறங்கியுள்ளது.

குறிப்பாக, அனைத்து மாநில பொதுமேலாளர்களுக்கும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்களில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிளான்ட்டுகளை பராமரிக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனங்களின் மோசமான பராமரிப்பு பணி காரணமாக, சரியான சேவை கிடைக்காததால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கி மனஉளைச்சலில் இதுவரை 15 ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே, ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை ரத்து செய்ய வேண்டும். அத்துடன், அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தையும் வழங்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் சி.கே.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து