நீலகிரி,
தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்த நிலையில், பயணிகள் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் அறிவித்துள்ளார்.
அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் , படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.