நாகர்கோவில்,
தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் திருச்சியில் இருந்து வந்த ஒரு அரசு பஸ்சை அதிகாரிகள் மறித்து பயணிகளின் பொருட்களை சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பையில் வைத்திருந்தார். இதை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனே அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பயணியை சோதனை செய்தனர். அப்போது அவர் மேலும் ரூ.20 லட்சத்தை துணியில் சுருட்டி தனது இடுப்பில் கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர், மதுரையை சேர்ந்த கனகராஜ் (வயது 53) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல அதே பஸ்சில் வந்த திண்டுக்கலை சேர்ந்த முகமது அனிபா (41) என்பவரிடம் இருந்து ரூ.30 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவரும் பணத்தை இடுப்பில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை யாரிடம் இருந்து வாங்கி வந்தார்கள்? யாரிடம் ஒப்படைப்பதற்காக அந்த பணம் கொண்டு வரப்பட்டது? என்ற விவரம் தெரியவில்லை. ஒருவேளை இது ஹவாலா பணமாக இருக்குமோ? என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இருவரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் நாகர்கோவிலில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை கொண்டிராஜபாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே நேற்று அதிகாலை பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து தஞ்சைக்கு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் இருந்த பார்சலில் செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை சென்னை தி.நகரை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அந்த செல்போன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த செல்போன்களுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனையடுத்து அந்த செல்போன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மொத்தம் 180 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மதியம் தூத்துக்குடி டபிள்யு.ஜி.சி. ரோட்டில் ஒரு நகைக்கடை அருகே அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் சுமார் 102 கிலோ தங்க நகைகளும், வெள்ளி நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த வேன் கர்நாடகாவில் இருந்து சேலம், கோவை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு நகைகளை கொண்டு வந்தது தெரியவந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகைகளை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சந்தீப் நந்தூரி கூறும்போது, நகைகளுக்கான ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றார்.