தமிழக செய்திகள்

பஸ் ஸ்டிரைக்: பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளுங்கள் தொழிற்சங்கத்தினருக்கு நீதிபதிகள் வலியுறுத்தல்

பொதுமக்கள் படும் சிரமத்தை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை. தொழிலாளர்கள் பிரச்சினைக்காகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என நீதிபதிகள் கூறினர்.#BusStrike

தினத்தந்தி

சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8-வது நாளை எட்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று காலையில் சுமார் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படாததால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை நேரத்தில் ஸ்டிரைக் நடப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஸ் ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள், கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்துகளை உடனே இயக்க வேண்டும். வழக்குகளை பிறகு விரிவாக விசாரித்துக் கொள்ளலாம். எனவே இன்றிரவு முதலே பேருந்துகளை இயக்குங்கள்என்று அறிவுறுத்தினார்கள்.

பொதுமக்கள் நலன் கருதி ஐகோர்ட்டு தெரிவித்த யோசனையை ஏற்க போக்குவரத்து கழக நிர்வாகிகள் தயங்கினார்கள். இதையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பொங்கல் பண்டிகைக்காக 17-ந்தேதி வரை பேருந்துகளை இயக்குவது பற்றி மனசாட்சியுடன் நல்ல முடிவு எடுங்கள் என்றனர். அதோடு வியாழக்கிழமை (இன்று) இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

அதன் பிறகு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அவர்கள், பேருந்து வேலைநிறுத்தத்தை கைவிட 3 நிபந்தனைகள் விதித்தனர்.

1. அரசு அறிவித்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்றுக் கொள்கிறோம். இதுபற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு உறுதி அளிக்க வேண்டும்.

2. 2.44 மடங்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் கோர்ட்டு நடவடிக்கையை எதிர் கொள்ளத் தயார்.

3. எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு சரியான உறுதி மொழியை தர வேண்டும். இவ்வாறு 3 நிபந்தனைகள் வெளியிடப்பட்டன.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் இந்த நிபந்தனைகளை அரசு ஏற்கவில்லை. 2.44 மடங்கு ஊதிய ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுவதில் இழுபறி ஏற்பட்டது. இன்று காலையும் இந்த இழுபறி நீடித்தது.

அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 காரணி ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தின் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையை வாபஸ் பெறவேண்டும். போராட்ட காலத்தில் வேலைக்கு வரவில்லை என்று சம்பளத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்று கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கையை அட்வகேட் ஜெனரல் ஏற்க மறுத்தார். போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். இவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளை கைவிட்டால், போராட்ட காலத்தில் பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கும், இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.

எனவே இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது. அதேநேரம், ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஒரு மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்துள்ளனர். அப்போது அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரலுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் இன்று மதியம் வரை பஸ் ஸ்டிரைக் நீடித்தது. வேலை நிறுத்தம் விலக்கப்படுமா? என்பது பற்றி இன்று பிற்பகலில் தெரியும். 2.15 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் விசாரிக்க தொடங்கியதும் .தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்த நடுவர் நியமிப்பது தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு கேட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு பிற்பகல் 2.45 மணிக்கு ஒத்திவைக்கப்படது.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. பேச்சு நடத்த நடுவர் நியமிப்பது தொடர்பாக அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பேச்சு நடத்த நடுவர் நியமிக்க அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது.

வேலைநிறுத்த நாட்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குற்ற வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான குற்ற வழக்குகளை வாபஸ் பெற அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது.

0.13 காரணி ஊதிய உயர்வுதான் பிரச்சினையாக உள்ளது, இது தொடர்பாக நடுவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நீதிபதிகள் கூறினர்.

பொதுமக்கள் படும் சிரமத்தை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை. தொழிலாளர்கள் பிரச்னைக்காகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு செல்வதை ஏற்பதும், மறுப்பதும் தொழிற்சங்கங்களின் விருப்பம். பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என அரசு மீது தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்ட வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு தயார் என இன்று கூட அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.

பொது மக்கள் நலனை கருத்தில் கொள்ளுங்கள் என தொழிற்சங்கத்தினருக்கு நீதிபதிகள் மீண்டும் வலியுறுத்தினர் சமரச பேச்சு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் கூறினர்.

நிலுவைத் தொகையை வழங்க நீதிமன்றத்திற்கு துணிவில்லை என்று கூறிய தொமுச பொதுச்செயலாளர் சண்முகத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவுபடி நிலுவை தொகை வழங்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் கூறினர்.

#MadrasHC | #BusStrike

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு